Monday, 23 November 2015

விரதமே மகத்தான மருத்துவம்!-நம்மாழ்வார்



விரதமே மகத்தான மருத்துவம்!
இயற்கை மீதான பேரன்பும் உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் என்பதற்குச் சாலச் சிறந்த உதாரணம் நம்மாழ்வார். சிறிய எழுத்துக்களையும் கண்ணாடி இல்லாமல் துல்லியமாகப் படிப்பது, சோர்வே இல்லாமல் பல கிலோ மீட்டர் தூரம் நடப்பது, தோட்ட வேலை, எழுத்துப் பணி, மேடைப் பேச்சு என ஒரு நாளைக்கு 16 மணி நேரம் பம்பரமாகச் சுழல்கிறது நம்மாழ்வாருக்கு. ”75 வயதிலும் எப்படி இப்படி ஒரு சுறுசுறுப்பு?” எனக் கேட்டால், சிறு குழந்தையாகச் சிரிக்கிறார் நம்மாழ்வார்.
”எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலேயே, ‘உணவே மருந்து; மருந்தே உணவு’ன்னு திருமூலர் சொல்லிட்டுப் போயிட்டார். இந்த அற்புதமான வாக்கை ஆராதிக்கத் தவறியவர்கள்தான் எண் சாண் உடம்பில் எண்ண முடியாத வியாதிகளோடு அலையறாங்க. வாழ்க்கையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நோயே வராமல் வாழ்வது. இரண்டாவது, நோய் வந்த பின் வருந்தியபடியே வாழ்வது. முதல் வகையில் இணைந்துவிட்டால், நமக்கு இன்னல்கள் இருக்காது.
‘மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ என்ற குறளிலேயே நோய் அண்டாமல் வாழ்வதற்கான வழி சொல்லப்பட்டு இருக்கிறது. உண்ட உணவு சீரணமாகிவிட்டதை அறிந்து, அதன் பிறகு உண்டால் அந்த உடம்புக்கு மருந்து என்ற ஒன்றே தேவை இல்லை எனச் சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.
எதை, எப்போது, எப்படி உண்ண வேண்டும் என்பதே நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நாம் உண்ணும்போது முதலில் உணவை விழுங்குறோம். ஆனால், அப்படி விழுங்கக்கூடாது. பற்களால் நன்றாக அரைத்து, கூழாக்கி உமிழ்நீரோடு சேர்த்து உள்ளே தள்ளவேண்டும். இதைத்தான், ‘நொறுங்கத் தின்றால் நோய் தீரும்!’ எனப் பழமொழியாகச் சொன்னார்கள். அளவு கடந்து உணவு உண்பவர்கள் நோய்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். நாம் உண்ணும் உணவுக் கழிவுகள் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேங்குகிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது நோய் உண்டாகிறது. சரி, அதை எப்படிக் களைவது? இதற்கான சுலபமான வழி, உண்ணாநோன்பு. இதைத்தான் ‘விரதம்’ என்ற பெயரில் கடைபிடித்தார்கள் நமது முன்னோர்கள். ‘நோயிலே படுப்பதென்ன கண்ண பரமாத்மா, நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பரமாத்மா’ எனப் பாடினார்களே… அந்த நோன்புதான் உண்ணாநோன்பு. இறக்கும் தருவாயில் இருப்பவனைக்கூட உயிர்த்தெழுச் செய்யும் சக்தி உண்ணா நோன்புக்கு இருக்கிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் ‘தெரப்பூட்டிக் பாஸ்ட்டிங்’ (Theraupeutic fasting) என்று சொல்கிறார்கள். இன்றைக்கு சர்வதேச அளவில் இந்தச் சிகிச்சை பிரபலமாகி வருகிறது. உண்ணாநோன்பு இருக்கும்போது நம் உடலுக்குள் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் தன்னாலே வெளியேறி விடுகின்றன. உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும்.
அடுத்ததாக, எதைச் சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். நம் உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ‘வெந்ததைக் குறைத்தால் வேதனையை குறைக்கலாம்’ என்பார்கள். அதாவது வேகவைத்த உணவைக் குறைத்துக்கொண்டு பச்சைக் காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும். நான் 35 வயதில் கண்ணாடி அணிந்தேன். 60 வயதில் அதை அகற்றிவிட்டேன். இப்போது கண்ணாடியைப் பயன்படுத்துவதே இல்லை. பொடி எழுத்துக்களைக்கூட என்னால் துல்லியமாக வாசிக்க முடியும். இதற்குக் காரணம் எனது உணவுப் பழக்கங்கள்தான்!” – விழி விரியவைக்கும் அளவுக்கு ஆச்சரியமாகப் பேசுகிறார் நம்மாழ்வார். அடுத்து, மூலிகைகளை நோக்கி நீள்கிறது பேச்சு.
”இயற்கை நமக்குக் கொடுத்த அருட்கொடை மூலிகைகள். நாம் பயிர் செய்யாமலேயே நமக்கான உணவாக சில மூலிகைகளை இயற்கை உற்பத்தி செய்கிறது. உதாரணமாக, பிரண்டை. இதைத் துவையல் செய்து சாதத்தில் குழம்புக்குப் பதிலாக பிசைந்து உண்ணலாம். தூதுவளை, மொசுமொசுக்கை இலைகளைச் சேர்த்து ரசம் வைத்து உண்டால் நாள்பட்ட சளி தீரும். வாய்ப்புண்ணை ஆற்ற மணத்தக்காளி, வெட்டுப் புண்களை ஆற்ற வெட்டுக்காயப் பச்சிலை, அனைத்துக் கும் சிறந்த ஆவாரை, துளசி என மூலிகைகளின் அதிசய ஆற்றல் கொஞ்சநஞ்சம் அல்ல. நம்மைச் சுற்றி வளர்ந்துகிடக்கும் எண்ணில்லா மூலிகைகளை நாம் சரியாகப் பயன்படுத்தினாலே பாதி நோய்கள் காணாமல் போய்விடும்!” எனச் சொல்லும் நம்மாழ்வார், உடலின் மகத்துவத்தையும், யோகாவின் சிறப்பையும் சொல்லத் தொடங்கினார்.
”இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை. பசி வந்தால் உணவு, தாகம் எடுத்தால் தண்ணீர், சோர்வு வந்தால் உறக்கம் என உடல் சரியான சமிக்ஞைகளை நமக்கு கொடுத்தவண்ணம் இருக்கிறது. அதன்படி உணவு, உறக்கத்தை நாம் கடைப்பிடித்தாலே உடலுக்கு எந்தவிதமான சிக்கலும் வராது. பலர் உடம்பு வலிக்காக மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறார்கள். வலி என்பது உடம்பு தன் உள்ளே இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முயற்சி. அதைத் தடுக்கக்கூடாது.
50 வயது வரை உடம்புதான் உன்னதம் என நினைக்கும் மனது, அதற்குப் பிறகு ஆன்மாவை ஆராதிக்கிறது. ஆன்மா இந்த உடம்புக்குள்ளேதானே இருக்கிறது! அதனால், உடலைப் பராமரிப்பதும் அவசியம். இது இரண்டையும் ஒரே நேரத்தில் பராமரிக்க உதவுவதுதான் யோகா. நான் நீண்ட காலமாக யோகா செய்து வந்தாலும், ‘ஈஷா’ பயிற்சியில்தான் அதை முறைப்படுத்தினேன். தினமும் காலையில் நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகா செய்கிறேன்.
ஈஷா யோகா பயிற்சியின்போது நடந்த நேர்காணலில், ‘யோகா செய்வதன் மூலம் நோய்கள் குணமாகும் என்றால், எதற்காக இத்தனை மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இருக்கின்றன?’ என சத்குருவிடம் கேட்டேன். ‘நாட்டில் தினமும் ஆயிரக் கணக்கில் விபத்துகள் நடக்கின்றன. விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்க முடியாது அல்லவா? அவர்களுக்குத் தேவை, அவசர சிகிச்சை. அதற்காகத் தான் மருத்துவர்களும், மருத்துவமனைகளும்!’ என்று அவர் அமைதியாகச் சொன்னார்.
அவர் சொன்னது உண்மைதான். ஆங்கில மருத்துவத்தை அவசரத்தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாத்திரை, மருந்துகளைத் தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது, அதுவே உடம்பில் பல உபத்திரவங்களை உண்டாக்குகிறது.
மொத்தத்தில், சரியான பழக்க வழக்கங்களும், உடலைப் பேணும் உணவு முறையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலும் இருந்தாலே நோய்க்கு ‘நோ என்ட்ரி’ போட்டுவிடலாம்!” எனச் சொல்லும் நம்மாழ்வார் இறுதியாக இப்படிச் சொல்கிறார் வாழ்வியல் மந்திரத்தை.
”கணியன் பூங்குன்றனார் சொன்ன ‘தீதும், நன்றும் பிறர் தர வாரா’ என்கிற வரி நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒருசேர வழிகாட்டக்கூடியது. அந்த வரிகளை மனதில் ஏற்று இயற்கையை வணங்கி, உடலை ஆராதிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்வின் சிறப்புக்குக் குறைவே இருக்காது!”.

http://www.pannaiyar.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/2/

Tuesday, 23 June 2015

உணவும் மருந்தும்

சித்தர்கள் நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் 

சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்
மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .
அதன் படி
உணவு முறைகளான இவைகள் ..
நக்கி சாப்பிடுவது ,
சப்பி சாப்பிடுவது
கடித்து சாப்பிடுவது
உறிந்து சாப்பிடுவது
என்று 4 வகையாக பிரிக்கலாம் .எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று
முறை இருக்கிறது .
சித்தர்கள் சொல்வது
உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில்
அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .
கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும்
சக்கரை நோய் வராது,
உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும்.
கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .
தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிர் தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .
பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது .
இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது
எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று
சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும்
என்று சொல்கிறார் .
மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து
நோய்களை அறியலாம் .
நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் ..
மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம்
அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம்
இதுவே தீக்ஷை ,
இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ....
கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் ....
நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் .
இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது
இந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை .
(குளிர்ச்சி தேவை )
இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்
ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு )நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது
இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் )
நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.
தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர்
வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.
சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .
உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும்
அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம்
சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.

நீங்கள் எடுத்து உணவு சரியாக செரிமானம் ஆகிறதா?
நமக்கு எல்லா சக்திகளையும் அவைகள் தருகிறதா?
நம்முடைய குடல் நாம் எடுத்த உணவை போதும் என்று எப்படி சொல்லும் ?..................அடுத்த பதிவில் பாப்போம் ...
அகத்தியர்
புஜெந்தர் ஆசிகளுடன் ....
முறைப்படியும் ,
கால்களை மடக்கி அமர்ந்து உன்ன ஆரம்பித்ததும் என் உடலில் பல மாற்றம் நான் கண்டது உண்மை .....

பழமொழி

இப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.
இது சரியா ?
"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"
சரியானா பழமொழி :
"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".
விளக்கம் :
இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது.
கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.
இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.
கடவுளை நாயாக்கிய பெருமை தமிழர்களையே சேரும்.
__________________________________
பழமொழிகள்:
1. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்வான் - தீர்ப்பு சொல்லும் போது அந்த இடத்தில அரசன் இல்லை ...தெய்வம் நின்று தண்டனை தருவதாக எண்ண வேண்டும் ..
2. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை - கழு என்ற புல்லில் தான் அந்த காலத்தில் தூங்கும் பாய் செய்வார்களாம். அதன் வாசனை கற்பூரம்pola இருக்குமாம் ( கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை )
3. பொம்பள சிரிச்சா போச்சு போகியலை விரிச்சா போச்சு -- பெண் வயதுக்கு வந்ததும் வெட்கப்பட்டு சிரித்தால் அவள் கல்யாணத்துக்கு தயார் என்றும் .. சுருண்டு இருக்கும் புகை இலை விறிஞ்சதும் விற்க தயாராகிவிடும் என்றும் அர்த்தம்
4. ஆடி காத்துல அம்மியும் நகரும் -ஆடி காற்றில் அம்மையும் நகரும் ( கோடை காலத்துல பரவும் அம்மை போன்ற நோய்கள் ஆடிஇன் இதமான காற்றில் அந்த ஊரில் இருந்து விலகும்.
__________________________________
மற்றும் சில பழமொழிகள்:
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - சரி.
படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.
படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் - சரி.
ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.
ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன் - சரி.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - தவறு.
நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு - சரி.
(சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு... அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது...ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகு்.)
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் - தவறு.
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். - சரி
நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.
மாறுவோம்...பிறரை மாற்றுவோம்...
சிந்தனைக்கு .....
ஒரு கணக்கு....
ராகு காலம் எமகண்டம்.
ராகுவிற்கு - ராகு காலம்
கேதுவிற்கு - எமகண்டம்
இவர்களுக்கு வீடு கிடையாது. மீதி ஏழு கிரகத்துக்கும் வீடு உண்டு. ஒரு நாளைக்கு 24 மணி நேரம். ஆகவே, தனித்தனியாக ஒரு கிரகத்துக்கு இந்த முழு நேரம் கிடைக்கிறது.
ஞாயிறு - சூரியனின் நாள்
திங்கள் - சந்திரனின் நாள்
செவ்வாய் - செவ்வாயின் நாள்
புதன் -புதனின் நாள்
குரு - வியாழக்கிழமை
சனி - சனிக்கிழமை
வெள்ளி - சுக்கிரனின் நாள்
ஆகவே, இவர்கள், இந்த ஏழு பெரும்,. தனது கிழமைகளில் ராகுவிர்க்கும் கேதுவிர்க்கும் ஒன்றரை மணி நேரம் வீதம் இருவருக்கும் மூன்று மணிநேரம் கொடுக்கிறார்கள்.
ஆகவே ஒரு கிரகத்துக்கு மொத்தம் 24 மணி நேரத்தில் 3 மணி நேரம் போய்விட்டால், மீதி ஒவ்வொரு கிரகத்துக்கும் 21 மணி நேரம் கிடைக்கும்.
ராகுவிர்க்கும் கேதுவிர்க்கும் வீடு இல்லை.ஆனால்., இவர்கள், தினமும் அந்த அந்த கிரகம் தரும் மூன்று மணி நேரத்தை வாங்கிக்கொள்கிறார்கள். அப்போது ஒரு வாரத்துக்கு இவர்களுக்கும் 21 மணி நேரம் கிடைத்துவிடுகிறது இதை கவனித்து பாருங்கள்.
நம்முடைய வாழ்கையில் நமக்கு அனைத்தும் கிடைத்தாலும், நாம் சில தானம் செய்யும்போது, தானம் வாங்குபவர்களுக்கு அனைத்தும் கிடைத்துவிடுகிறது என்பதும் உண்மை .







வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.

எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது. அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது.

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டவை அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது..!
வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது ..!!!

நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..! விஞ்ஞான அடிப்படையில் தான் செயல்பட்டிருக்கிறார்கள்..!
நம் முன்னோர் பெருமையை உரக்க சொல்வோம்..!

நன்றி :
தினகரன்
https://www.facebook.com/groups/info.thagaval/

Friday, 13 March 2015

சத்தம் - சித்தம்- நலம் 360

சத்தம் - சித்தம்- நலம் 360

பிறந்த கணத்தில் அழுகையுடன் ஆரம்பிக்கும் மனிதனின் பேச்சு, அடுத்த சில மாதங்களில் 'அம்மா’ என்ற வார்த்தையில் தொடங்கி, இறுதிமூச்சின் முனகல் வரை எழுப்பும் குரல்வளை என்கிற ஒலி ஊடகம், மனிதனுக்கு மட்டும் கிடைத்திருக்கும் இயற்கை வரம். அன்பை வெளிப்படுத்த, அக்கறையைக் காட்ட, காதலைச் சொல்லி நெகிழ்த்த... என அனைத்துக்குமான மொழியைப் பிரசவிக்கும் குரல்வளை, மனித உடலின் ஒரு மகத்துவ அமைப்பு. நுரையீரலில் இருந்து மூச்சுக் காற்றை எழுப்பி, குரல்நாண்கள் ஒன்றோடு ஒன்று இணைவதால் ஏற்படும் அதிர்வுதான் குரல். நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்று, கழுத்தில் நிலைகொண்டு பல், உதடு, நாக்கு, மூக்கு, அன்னம் போன்றவற்றில் மூளையின் திட்டமிட்ட உத்தரவின்படி சீரான அசைவைப் பெறும்போது, அது 'சங்கீத ஜாதி முல்லை...’ என சாதகம் செய்துவந்த பாடலாக, 'டார்லிங் டம்பக்கு...’ என உச்சஸ்தாயில் உற்சாகமாக வெளிப்படுகிறது.
'குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்’ என்கிறது வள்ளுவம். அந்த மழலை மொழியின் அத்தனை வசீகரத்துக்கும் காரணம், அது பெண் குரல் என்பதுதான். 12-13 வயது வரைக்கும் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் குரல் கிட்டத்தட்ட ஒரேமாதிரி இருக்கும். 13 வயதைத் தாண்டும்போது, ஆண்களுக்கு ஆண் ஹார்மோன் ஆதிக்கம் தொடங்கி குட்டி மீசை துளிர்க்கும்போது, குரல் உடையத் தொடங்கி வலுப்பெறும். அப்போதுதான் ஆணின் குரல்நாண்கள் நீளம் அடைந்து, விரிவடைந்து, 'ஆடம்ஸ் ஆப்பிள்’ தொண்டையில் தெரியும். பெண்களுக்கு, இந்தக் குரல்நாண்கள் வளரவும் விரியவும் முயற்சிப்பது இல்லை. அதனால்தான் 30 வருடங்கள் கழிந்தும் 'காற்றில் எந்தன் கீதம்...’ என எஸ்.ஜானகி பாடினால், முந்தைய சிலாகிப்பு அச்சுஅசலாக அப்படியே தொற்றிக் கொள்கிறது. ஆண் 17-18 வயதை எட்டிய பிறகும் கொஞ்சம் பெண்மை கலந்த குரலில் பேசினால், அது 'பியூபர் போனியா’ எனும் கோளாறு என்கிறது நவீன மருத்துவம். குரல்நாண்களை இழுக்கும் அறுவைசிகிச்சையுடன், தொடர்ந்து மூன்று மாதங்கள் ஸ்பீச் தெரபியும் எடுத்துக்கொண்டால் ஆண்குரல் வந்துவிடும்.
ஒவ்வொருவரின் உள்ளங்கை ரேகைகளில் தனித்துவம் இருப்பதுபோல், குரலிலும் பிரத்யேக அடையாளங்கள் இருக்கின்றன. ஆனால் மூளைக்குள், குரலை அடையாளம் காண்பதும், தோற்றத்தை அடையாளம் காண்பதும் வெவ்வேறு  துறை என சமீபத்தில்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். இணையத்தில் பிரபலமான TED பேச்சுத் தொகுப்பில், அமெரிக்காவின் பிரபல நரம்பியல் துறை பேராசிரியர் ராமச்சந்திரன் இதுகுறித்து ஆச்சர்யம் தெரிவித்திருக்கிறார். விபத்து ஒன்றில் மூளையில் அடிபட்ட நண்பர் ஒருவரைப் பார்க்க வந்த அவரது அம்மாவை, நண்பருக்கு அடையாளம் தெரியவில்லை. மிகவும் வருந்திய அவரது அம்மா வீட்டுக்குச் சென்று, மகனை தொலைபேசியில் அழைத்து, 'டேய்...’ எனச் சொல்லி முடிக்கும் முன்பே, 'அம்மா... எங்கம்மா இருக்க..? ஏன்மா நீ இன்னும் என்னைப் பார்க்க வரலை’ எனக் கதறியிருக்கிறார் அந்த மகன். இதுபோன்ற உதாரணங்களுக்குப் பிறகுதான், குரலுக்கான மூளைச் செயலகம் குறித்த புரிதல் மருத்துவ உலகுக்குத் தெரிய வந்தது. கைரேகைகள்போல குரலின் பிரத்யேக வித்தியாசம்தான், சைபர் கிரைம் கிரிமினல்களை அடையாளம் காண உதவுகிறது!
இந்தக் குரல்வளை வெளிக்காற்றுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதால், தொற்றும் நோய்க்கூட்டம் சுளுவாக குரலை நொங்கெடுத்துவிடும். 'அட... 'காதல் பரிசு’ கமல்போல டீசன்ட்டா இருக்காரே,’ எனப் பயணத்தில் அவருக்குப் பக்கத்தில் அமரும்போது, அவர் 'வாழ்வே மாயம்’ கமல்போல வழியெல்லாம் இருமிக்கொண்டே வந்தால், ஊர் வருவதற்குள் நமக்கு நோய் வரும். தொண்டைத் தொற்றுகள் குரல்வளையைப் பாதித்து, அதன் உட்சதையை வீங்கவைத்துவிடும். உணவை விழுங்கும்போது, வலி உண்டாகும். சத்தமாகப் பேசும்போது வலி கூடும். வெந்நீரில் உப்புவிட்டு காலை, மாலை வாய் கொப்பளித்து அல்லது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்த திரிபலா பொடி போட்ட வெந்நீரில் வாய் கொப்பளித்து இதற்குப் பரிகாரம் தேடலாம். கூடவே பாலில் மஞ்சள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு கலந்து சூடாகக் குடித்தால், குரல்வளை அழற்சி மறையும்.
சிறுவயதிலேயே தொண்டையில் குடியேறும் கிருமி ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus). நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும்போது, அந்தக் கிருமிக்கூட்டம் மெதுவாக டான்சில் வீக்கம் (Tonsillitis), அடினாய்டு வீக்கம் (Adenoiditis) என உண்டாக்கி, பின்னர் மூட்டுவலியை உண்டாக்கி, மெள்ள மெள்ள ரத்தத்தில் கலந்து, இதயத்தின் வால்வுகளில் குடியேறி அதன் செயல்திறனை அழிப்பது எனப் பல பிரச்னைகளுக்குக் காரணம் ஆகின்றன. 'Licks the joint; bites the heart; kicks the brain’ என இந்த நோயின் நகர்வை நவீன மருத்துவர்கள் கவிதையாகவே கூறுவார்கள். மொத்தத்தில் இந்த நோய் குத்தாட்டம் தொடங்குவது குரல்வளையில்தான். நள்ளிரவில் ஐஸ்க்ரீம், தொண்டை, கன்னக் கதுப்புகளில் ஒட்டிக்கொள்ளும் சாக்லேட் போன்றவற்றை மென்று திரியும் குழந்தைகளுக்குத்தான் இந்தப் பிரச்னை பெரிதும் வருகின்றன. ஆரம்பத்திலேயே இந்தக் கிருமியின் அடாவடியைக் குறைக்க, கற்பூரவல்லிச் சாறும் தேனும் கலந்து சுரசம் செய்து கொடுக்கலாம். மிளகைப் பொடித்து, தேனில் குழைத்து, மிதமான வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். சித்த மருத்துவத்தில் இதற்குத் தீர்வாக கடற்சங்கை பஸ்பம் ஆக்கி மருந்தாகக் கொடுப்பார்கள். இந்த மருந்தை 3-4 சிட்டிகை நெய்யில் கலந்து கொடுக்க, ஆரம்பகட்ட டான்சில் வீக்கத்தை அடியோடு விரட்டலாம். குழந்தைக்குக் கூடுதல் தேவையான கால்சியம் சத்தையும் சேர்த்துத் தந்து, டான்சில் வீக்கத்தையும் வீழ்த்தும் இந்தச் சங்குபஸ்பம், சிறந்த குரல்வளைக் காப்பான்.
டான்சில் வீக்கம் வந்தால், 'அதுக்கென்ன, வெட்டி எறிஞ்சிட்டாப் போச்சு’ என்ற மனோபாவம் இப்போது கொஞ்சம் மாறிவருவது ஆறுதலான விஷயம்.   'அண்ணாக்குத் தூறு’ எனச் சொல்லப்படும் டான்சில் வீக்கத்துக்கு, வெள்ளைப் பூண்டுச் சாற்றை தேன் கலந்து தொண்டையில் தெரியும் வீக்கத்தில் தடவும் முறை சித்த மருத்துவத்தில் உண்டு. வெள்ளைப் பூண்டை அரைத்து, ஒரு துணியில் தடவி, லேசாகச் சூடுகாட்டி, அந்தச் சூட்டுடன் துணியைப் பிழிந்து, பூண்டுச்சாறு எடுக்க வேண்டும். இதோடு, சுத்தமான தேனை பூண்டுச்சாறுடன் சமஅளவு கலந்து வைத்துக்கொள்ளவும். சுத்தமான பஞ்சில் இந்தப் பூண்டுத்தேனைத் தொட்டு டான்சில் வீக்கத்தில் மென்மையாகத் தடவிவிட, வீக்கம் மெள்ள மெள்ளக் கரையும். ஆனால் மிரண்டு நிற்கும் குழந்தையை மிரட்டிப் பிடித்து, கால்களுக்கு இடையில் இறுக்கி, அவர்களின் வாயைப் பிளந்து... என வன்முறையில் இறங்கக் கூடாது. குழந்தைகளுக்கு விஷயத்தைப் புரியவைத்து மெதுவாகத் தடவ வேண்டும். இல்லையெனில், அந்தச் சாற்றை மூன்று சொட்டுகள் விழுங்கச் செய்தால்கூட போதும்!
தொடர் அஜீரணம், இரைப்பையின் அமிலத்தை எதுக்களித்து மேலே அனுப்பும் நிலையிலோ அல்லது உணவுக்குழாயும் இரைப்பையும் சந்திக்கும் இடத்தின் வால்வு சீராக இல்லாமல்போய் அதனால் அமிலத் தாக்குதல் உண்டாவதாலோ, குரல் கெட்டுப்போகும் வாய்ப்புகள் இப்போது அதிகம். இந்த இரண்டுக்கும் எளிய மருந்து அதிமதுரம். நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் அதிமதுரம் ஒவ்வொரு வீட்டு அஞ்சறைப்பெட்டியிலும் இருக்கவேண்டிய மருத்துவ உணவு. இந்தியாவில் மட்டும் அல்ல... சீன மருத்துவத்திலும் ஜப்பானிய கம்போ மருத்துவத்திலும் அதிமதுரம் மிகப் பிரசத்தி. அதிமதுரம் வயிற்றுப்புண்ணை ஆற்றும் ஆற்றல்கொண்டது. வயிற்றில் அதிகப்படியான அமிலச் சுரப்பையும் குறைக்கக்கூடியது. மேலும், அந்த அமிலம் உண்டாக்கும் வறட்டு இருமலுக்கும், மிகச் சிறந்த கை மருந்தும்கூட. அரை டீஸ்பூன் அளவு அதிமதுரத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிடலாம். அல்லது அரை டம்ளர் பாலில் கலந்து காய்ச்சியும் குடிக்கலாம்.
கல்லூரிப் போட்டிகளில் மனசுக்குப் பிடித்தவளின் கவனத்தை ஈர்க்க, 'ஆரோமலே...’  என ஏட்டிக்குப் போட்டியாக மூச்சைப் பிடித்துக் கத்திவிட்டு மறுநாள், 'மாப்ள.... காத்துதான்டா வருது...’ என்போர், ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். குரலை முறையற்றுப் பயன்படுத்தினாலும், அளவுக்கு அதிகமாகச் சத்தம் போட்டாலும் குரல்நாண்களுக்கு ஆபத்துதான். இதுபோன்ற தொடர்ச்சியான கத்தல், கூச்சல் குரல்நாண்களில் சிறுசிறு கட்டிகளை உண்டாக்கிவிடும். உரத்தக் குரலில் விஷயத்தைச் சொல்லவேண்டிய ஆசிரியருக்கும், பாடகருக்கும், பேச்சாளருக்கும் அந்தக் கட்டிகள் வர அதிக வாய்ப்புகள் உண்டு. இவர்களைப் போன்ற அத்தனை பேருக்கும் முதல் மருந்து... மௌனம். மாதத்தில் இரண்டு நாட்கள் மௌன விரதம் இருந்தாலே, அந்தக் கட்டிகள் காணாமல்போய்விடும். அப்படிச் சரியாகாதபட்சத்தில் ஆடாதொடை இலையும் இரண்டு மிளகும் சேர்த்து கஷாயம் செய்து மூன்று நாட்கள், இரண்டு வேளை சாப்பிட்டால், குரல்நாண்களில் வீக்கம் குறையும். இதைத்தான் 'ஆடாதொடையினால் பாடாத நாவும் பாடும்’ என, பதார்த்தகுண சிந்தாமணி பாடல் சொல்கிறது. அந்தக் காலத்தில் அக்கரகாரமும் அதிமதுரமும் சேர்த்து சித்த மருத்துவர்கள் செய்து தரும் கண்டவிழ்தம், திடீரெனக் குரல் கம்மிப்போன பாடகர்களுக்கு 'கச்சேரி மருந்தாக’ இருந்திருக்கிறது.
'இவர்தான் முகேஷ்..!’ என சில காலம் முன்பு வரை தியேட்டரில் தோன்றும்போதெல்லாம் இளைஞர்களிடையே ஆரவாரத்தை அள்ளினார் புகைப் புற்றுக்கு உயிரைவிட்ட முகேஷ். ஆனால், 95 சதவிகிதக் குரல்வளைப் புற்று, புகைப் பழக்கத்தால் மட்டுமே வரும் என்பதை, முகேஷ§க்கு விசிலடித்த அந்த இளைஞர்கள் உணர வேண்டும். உலக சுகாதார நிறுவன அறிக்கை ஒன்று, '2020-ம் ஆண்டு ஏற்படும் 10 மில்லியன் மரணங்களில் 1.5 மில்லியன் மரணங்களுக்கு, புகைப் பழக்கம் உண்டாக்கும் குரல்வளை புற்றுநோய் காரணமாக இருக்கும்’ என்கிறது. இந்த இடத்தில் எனக்கு ஒரு சந்தேகம்... 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், 'புகைப் பழக்கம் தவிர்ப்போம்’ எனப் பிரசாரம் செய்ய பல கோடிகள் செலவழிக்கும் அரசாங்கம், நாடு முழுக்க சிகரெட் தயாரிக்கும் ஐந்து அல்லது ஆறு  கம்பெனிகளுக்கு திண்டுக்கல் பூட்டுபோட்டால், வேலை முடிந்ததே! அதை ஏன் செய்வது இல்லை !
10 ஆயிரம் மைலுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில், 'அம்மா’ என அழைத்த மாத்திரத்திலேயே, 'ஏம்ப்பா குரல் ஒரு மாதிரி இருக்கு? சரியாத் தூங்கலையா? பனி அதிகமா... சளி பிடிச்சுருக்கா? குரங்கு குல்லா போட்டுட்டு வெளியே போக வேண்டியதுதானே தங்கம்!’ என அன்பும் ஆதரவுமாக அம்மா அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்கச் செய்யும் அளவுக்கு, இயற்கை நமக்கு அளித்த மிக அற்புதமான குரலை, சேதாரம் இல்லாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியம்!

Tuesday, 17 June 2014

வாதம்-பித்தம் -கபம்


”எதைத் தின்னால் இந்த ’பித்தம்’ தெளியும்? ஒருவேளை ’வாதக்’க் குடைச்சலாய் இருக்குமோ? நெஞ்சில் ’கபம்’ கட்டியிருக்கு...”,என்கிற வசனங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் வழக்கொழிந்து வருகிறது. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இவ்வரிகள் ரொம்ப முக்கியமானவை. இன்னும்கூட நம் பாட்டி தாத்தா இப்படிப் பேசிக் கொள்வதை, கிராமங்களில் மருத்துவரிடம் தம் நோயை அவர்கள் இப்படிச் சொல்வதை பார்க்க முடியும். நாகரீக அனாதைகளாகி வரும் இளையதலைமுறையான, இன்றைய ’கூகிள்’ தலைமுறைக்கு, இது புதுசு. லூலூபி பாடுவதில் இருந்து, வெண்பொங்கலுக்கு மிளகை எப்போ போடணும்?, மயிலாப்பூர்ல ஏழு சுத்து கை முறுக்கு எங்கே கிடைக்கும் –ங்கிற வரை எல்லாத்தையுமே கம்ப்யூட்டரில் தேடும் அவர்கட்கு இந்த ”வாதம் பித்தம் கபம்” எனும் வார்த்தைகள்- வரிவிலக்கு பெற்று வந்திருக்கும் தமிழ்ப் பட டைட்டிலோ என்று மட்டுமே யோசிக்க வைக்கும்.

”வாதம், பித்தம், கபம்” -அல்லது ”வளி, அழல், ஐயம்” என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. அப்ப அதல்லாம் சித்தா ஆயுர்வேத டாக்டர்கள் சமாச்சாரமாச்சே.. நமக்கெதுக்கு? என நகர வேண்டாம். இந்த வாத பித்தம் கபம் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். முன்பு இருந்திருந்தது. ”ஐய்யோ..ஐஸ்கிரீமா? த்ரோட் இன்ஃபெக்‌ஷனாயிடும்! ரோட்டோர பரோட்டாவா..அமீபியாஸிஸ் வந்துடப் போகுது,” என்ற அறிவை வளர்க்கும் நாம், “உருளைக்கிழங்கு போண்டா நமக்கு வேண்டா. அது வாயு கொடுக்கும். வாதக் குடைச்சல் வந்துடும். மழை நேரத்தில தர்பூசணி எதுக்கு கபம் கட்டிக்க போகுது”-என்கிற மாதிரியான நம் தினசரி உணவும் அது அதிகரிக்க அல்லது குறைக்க வைக்கும் உடலின் இந்த மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த அறிவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த அறிவை இந்த வாரம் கொஞ்சம் இப்படி தீட்டுவோமா?.
”முத்தாது” என்று தமிழ் சித்தத்திலும் ”த்ரீதோஷா” என்றூ ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயத்தை தான் ”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் தொகுத்த வளி முதலாய மூன்று”- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது. கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது. இந்த மூன்று வாத பித்த கபமும் சரியான கூட்டணியாய் பணிபுரிந்தால் உடம்பு எனும் பார்லிமெண்ட் ஒழுங்காய் நடக்கும். ஒண்ணு ”காமன் வெல்த்”திலும்-இன்னொன்று அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் சேட்டை செய்தால்- ஒரே நோய்களின் கூச்சலும் குழப்பமும் தான் உடம்பு பார்லிமெண்ட்டில் ஓடும்.

இந்தக் கூட்டணி ஒழுங்காய் வேலை செய்ய உணவு, ரொம்ப முக்கியம். மனமும் பணியும் கூட கூட்டணிப் பணிக்கு அவசியமானது. ஒருவருக்கு மூட்டு வலி உள்ளது. கழுத்துவலி எனும் ஸ்பாண்டிலைஸிஸ் உள்ளதென்றால், வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள். இந்த வியாதிக்காரர்கள் வாதத்தை குறைக்கும் உணவை சாப்பிட வேண்டும். வாதத்தைக் கூட்டும் உணவை காசியில் விட்டு விடலாம். புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமனத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும். மூட்டுவலிக்காரர், மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவைக் கூடியவரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உனவ்பில் சேர்ப்பது வாத்தை குறைத்திட உதவும்.

பித்தம் அதிகரித்தால் அசீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னை வரக் கூடும். அல்சர், இரத்தக்கொதிப்பு, ஆரம்பநிலை மதுமேகம் என பித்த நோய் பட்டியல் பெரிசு. இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். நாம் தான் இப்போது மனசை கல்லில் அடித்து துவைச்சு காயப் போடும் வேகத்தை தானே விரும்புகிறோம்! பித்தம் அதிலும் அதிகம் வளர்கிறது. பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட, அதிகம் சேர்த்தால் பித்தம் கூட்டம். அரிசி அந்த விஷயத்தில் சமத்து.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) சாப்பிடணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என் இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க கிச்சன் கவனம் மட்டும் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம். இன்றைக்கு சர்க்கரை வியாதி பெருக பலரும் அதிக அரிசி உணவைக் காரனமாய்ச் சொல்கிறோம். அளவுக்கதிகமான மனப்பழு, மனஅழுத்தம் தான் அதைவிட முக்கியக் காரணமாகப் படுகிறது.

ஆதலால் சந்தோஷம் கால்படி, சிரிப்பு அரைப்படி போட்டு, அதில் கண்டிப்பாய்“ நான்”-கிள்ளி நீக்கிப் போட்டு, விட்டுக்கொடுத்தலில் வேகவைத்து புன்னகையில் தாளித்தெடுத்து காதலோடு பரிமாறுங்கள். பித்தமென்ன மொத்தமும் அடங்கும்.

அடுத்து கபம். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் நிறைய. பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள்.மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவுநேரங்களில் தவிர்க்கலாம். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை- என இவையெல்லாம் கபம் போக்க உதவும். தும்மிக்கொண்டே வரும் வீட்டுக்காரருக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல் அன்றிரவின் தூக்கத்தைக் கெடுக்காது.

வாத பித்த கபம்-இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியை அச்சுபிச்சு இல்லாமல் காப்பதில், சமையல்கூடத்திற்கு சந்தேகமில்லாமல் பங்கு உண்டு.அதற்கு பாரம்பரிய அனுபவம் அவசியம். பாரம்பரிய அனுபவங்கள் பாரம்பரிய சொத்தைக் காட்டிலும் பலம் பொருந்தியவை. அதனை மடமை என்றோ பழசு என்றோ ஒதுக்குவது முட்டாள்தனம். அங்கே இங்கே தவறுகள் சேர்ந்திருக்கும். ஆனால் இன்று சந்தையைக் குறிவைத்து ”2020-இல் இந்த நோயை உருவாக்க வேண்டும். அப்பொது இந்த மருந்தை இங்கு விற்கலாம்,’ என திட்டமிடும் கேவலமான எண்ணங்கள் கண்டிப்பாய் அப்போது கிடையாது. இதை புரிந்து பாரம்பரிய அறிவை கவனமாய் பாதுகாப்போம். அது நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்!