Sunday, 5 January 2014

சங்க இலக்கியத்தில் புவி வெப்பமயமாதலும், பருவநிலை மாறுபடும்

சங்க இலக்கியம் என்பது தொல் தமிழ்க்குடி வரலாற்றின் வாழ்வியல் பெட்டகமாக விளங்குகிறது. சங்க கால மாந்தர்கள் எல்லா வகையிலும் மேம்பட்டு அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கி வந்துள்ளதை அவர்தம் செவ்வியல் பாடல்கள் வழி உய்த்துணர இயலும். மேலும், அகமும் புறமும் ஆன அவர்களின் வாழ்வு இயற்கையுடன் இயைந்து வாழ்க்கை நெறிமுறைகளுள் வெறும் வீரமும் காதலும் மட்டுமல்லாது அவர்களது அறிவியல் தொலைநோக்குச் சிந்தனைகள் ஆய்விற்குரியனவாகக் காணப்படுகின்றன. அத்தகைய பேரறிவு கொண்ட தமிழினம் உலகத்தோருக்கு வழங்கியுள்ள செய்திகள் ஏராளம். அத்தனையும் அறிவியல் திறம் படைத்தவை. அன்று அவர் கண்ட பகற்கனவுகளும் மிகைக் கற்பனைகளுமே இன்று பலஅறிவியல் கண்டுபிடிப்புகளாக மலர்ந்துள்ளன. ஆதலால் எளிதாக இக்கருத்துக்களை எல்லாம் புறம்தள்ளிவிட முடியாது.

பண்டைத் தமிழன் நிலங்களை ஐவகையாகப் பாகுபடுத்திக் கோலோச்சி வாழ்ந்திருந்தான். அக்காலக் கட்டத்தில், தான் வாழ்ந்திருந்த நிலங்களின் வளத்தினையும் இடர்களையும் கூர்ந்து உற்று நோக்கி இலக்கணம் வழுவாது படைப்பாக வெளிப்படுத்துதலை தம் சமூகக் கடமையாகக் கொண்டிருந்ததன் விளைவே பாட்டும் தொகையும் ஆகும். குறிப்பாக, இவற்றுள் பயின்று வரும் பாலை நிலக்காட்சிகள் நடப்பு உலகளாவிய புவி வெப்பமடைதல் வாதத்தோடு ஒப்பு நோக்கத் தக்கவையாகத் திகழ்கின்றன. தவிர, இன்று உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிற புவி வெப்பமடைதலும் பருவகால மாறுபாடுகளும் தொன்றுத்தொட்டே அறிவுறுத்தப்பட்டுள்ளதை இப்போது அறிவோம்.

"கதிர் கையாக வாங்கி ஞாயிறு
பைதறத் தெறுதலின் பயங்கரந்து மாறி
விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம்" - (அகம் ‍164 : 1-3)

என்னும் பாடலில் சூரியனானது தம்முடைய வெம்மைக் கதிர்கள் மூலம் எங்குமுள்ள ஈரப்பசையினையெல்லாம் கவர்ந்து பசுமையற்றுப் போகும்படியாகக் காய்ந்ததால் இப்பரந்த உலகம் வெடிப்புகள் மிகுந்தும் வளம் ஒழிந்தும் காணப்படுவதாக அமையும். மேலும், இக்கதிர்கள் காடுகளின் அழகையெல்லாம் பேரளவு அழிந்து போகுமாறு கடுமையாகப் பொசுக்குவதால் தேக்கு மரங்களின் உயர்ந்த கிளைகளிலிருக்கும் பல அகன்ற இலைகள் ஈரப்பசையற்று வாடிப்போய் ஒல்லென்ற ஓசையுடன் வெப்பக்காற்றினால் உதிர்ந்து போகும். அதன்பின் அம்மரத்தின் நீண்ட கிளைகளும் வறுமையுற்றவரைப்போல வளமற்று விளங்கும் என்பதை,

"கைம்மிகக்
காடுகவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்
நீடுசினை வறியவாக ஒல்லென
வாடுபல் அகலிலை கோடைக்கு ஒய்யும்
தேக்குஅமல் அடுக்கத்து ஆங்கன் மேக்கெழுபு" - (அகம் - 143 : 1 - 5)

என்ற பாடல் விளக்குகிறது. தவிர,

"பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்" - (அகம் - 185 : 8-10)

என்பதில் பசுமையற்றுப் போன வறண்ட பாலை நிலத்தில் வெப்பம் மிகுதி காரணமாக மேகமும் பொழியாது ஒழியும். அதனால் உயர்ந்த சிகரங்களில் அருவியும் உருவாகாது விளங்குமெனக் காட்சியாக்கப்பட்டுள்ளது. இத்தகைய வான் உலந்து மழையானது பெய்யும் இடத்தை விட்டு நீங்கிச் செல்வதால் உண்டாகும் துயரத்தினை,

"உலகுதொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கிய மாக விசும்பில்" - (அகம் - 141 : 5 -6)

என்று உழவுத் தொழில் மட்டுமல்லாது உலகிலுள்ள மற்ற தொழில்களும் இதனால் கெட்டு மடியுமென்று எடுத்துரைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தொழில்களுள் தலையாயது உழவுத் தொழிலாகும். அந்த உழவுத் தொழிலுக்கு அடிப்படையானது மழை. அம்மழை புவிவெப்பம் காரணமாகவே விட்டு வேறிடம் செல்கிறது. மேலும் பருவம் மாறி பொழிகிறது. ஆக, புவி வெப்பமடைதலும் அதனூடாக நிகழும் பருவகால மாற்றமும் இயற்கை மற்றும் மனிதப் பேரிடர்களால் உண்டாகின்றன. அன்று இயற்கை மனிதனுக்கு சவாலாக விளங்கியது. இன்று மனிதன் இயற்கைக்கு பெரும் சவாலாகக் காணப்படுகின்றான். இவ்விரண்டினாலும் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாவது மனித இனம் என்பது தான் பெரும் சோகம். இன்றைய நவீன மனிதனிடம் காணப்படும் அதி நுகர்வுத் தன்மை, அறியாமைப் போக்கு, வருங்காலம் குறித்த அக்கறையின்மை முதலியன அக்கால மாந்தர்களிடத்து நிலவாது இருந்தமைக்குச் சான்றே சங்க இலக்கியமாகும். சான்றாக, காதல் பூண்ட மாந்தரிடையே இப்பருவகால மாற்றம் விளைவித்து விடும் துன்பம் அளப்பரியது என்பதை,

"வம்பும் பெய்யுமார் மழையே வம்புஅன்று
கார்இது பருவம் ஆயின்
வாராரோ நம் காதலோரே" - (குறுந் 382 : 4-6)

என்னும் பாடல்வழி உணர முடியும். இவையனைத்தும் நிகழ்கால வாழ்வியல் கூறுகளுடன் ஒப்பிட்டு அறியத்தக்கவை. ஆகவே, மேற்சுட்டிய பாடல்கள் மூலமாக அவற்றின் காட்சி மற்றும் கருத்தின்பத்தை மட்டும் துய்க்காமல் உள்ளீடாக இலங்கும் அறிவு புகட்டுதலையும் உணர்வோமேயானால் உலகத்தைப் பேரழிவிலிருந்துக் காத்துக் கொள்ள இயலும். புவி வெப்பம் மற்றும் பருவகால மாற்றம் குறித்த பழம்சிந்தனையில் பெருமளவு உழல்பவர்களாக இன்று நாம் உள்ளோம். இதற்கு மெத்தப் படித்த மேதாவித்தனத்தால் எழுந்த அசட்டையே காரணமாகும். இல்லாவிடில், ஆழ்கடலுக்குள்ளும் மலையுச்சியின் மீதும் உலகின் கவனத்தை ஈர்க்கும் நாடாளும் பேரவைக் கூட்டம் நடத்துவதற்கான அவசியமே எழுந்திருக்காது. தவிர, இந்தத் துயரம் மூத்தோர் அறிவை நுனிப்புல் மேய்ந்ததால் உண்டான விளைவாகும். உலகத்தாரிடையே பொதுப்புத்தி இல்லாததாலேயே டென்மார்க் கோபன்ஹேகன் புவி வெப்பமடைதல் மாநாடு தோல்வியில் முடிந்தது. புரிந்த வினைக்கும் பிராயச்சித்தம் பண்டைய இலக்கியங்களிலேயே நிச்சயம் காணப்படும். தேடுதல் தானே வாழ்க்கை. அவ்வாழ்க்கையை செம்மைப்படுத்துவது இலக்கியம் அல்லவா? ஏனெனில் இலக்கியத்தைப் படைத்தவர்கள் நம்மைப் போன்ற புலனின்பப் பிரியர்கள் அல்லர்; முன்னறிவிப்போர்கள். இது வெறும் பொய்யுரையோ புகழுரையோ அல்ல.

நன்றி : தமிழறிவோம்

No comments:

Post a Comment