”சிட்னியில் வசிக்கும் அக்கா வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது அக்காவின் மகள் வயதுக்கு வந்துவிட, விதம்விதமாக உணவுகளைத் தயார் செய்துவைத்து, ‘இதைச் சாப்பிடு, அதைச் சாப்பிடு’ என மகளுக்குத் திணித்துக்கொண்டிருந்தார் அக்கா. இதைப் பார்த்ததும், ”நம் ஊரில் இருக்கும் பலரே, இதில் பலதையும் மறந்துட்டாங்க. நீ மறக்காம பார்த்துப் பார்த்து செய்திட்டிருக்கியே’ என்றேன் நான்.
”இதுமட்டுமில்லை. காலையில தூங்கி எழுந்ததும் வெறும் வயித்துல நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், பால் இதெல்லாம் குடிக்கச் சொல்றாங்க. அதுக்கப்புறம் உளுந்தங்களிதான் சாப்பிடணுமாம். கொஞ்ச நேரம் கழிச்சு வாழைப்பழம், எள்ளுருண்டை இதெல்லாம் தர்றாங்க. வடை சாப்பிடு… பயத்தம் பருப்பு பாயசம் சாப்பிடுனு வெரைட்டியா சமைச்சுப் போடறாங்க’ என்று அம்மாவைப் பெருமையோடு பார்த்தாள் மகள்.
”வயசுக்கு வந்த சமயத்துல சாப்பிடற ஒவ்வொரு சத்தான ஆகாரமும், பொண்ணோட எலும்பை உறுதியா வெச்சுருக்கிறதோட, ரத்தப் போக்கை சரியாக்கி, வலியில்லாம பாத்துக்கும். என் காலத்துல, இதைவிட அதிகமாவே எங்கம்மா செஞ்சு போட்டாங்க. ம்ம்ம்… காலம் மாறிப்போச்சு. இப்பல்லாம் வாய்க்கு ருசியா இருக்கானு மட்டும்தானே பார்க்கறாங்க’ என பெருமூச்சுவிட்ட அக்கா, ஆச்சர்யக்குறியாகவே நிற்கிறார் என் மனதில்!
நவீனம் என்கிற பெயரில், நம்மில் பலரும் சத்தில்லாத உணவுகளைத்தான் விருப்ப உணவாக வைத்திருக்கிறோம். ஆனால், மாதவிடாய் வலிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாவும், பிரசவவலி பொறுக்காதவர்களாகவும், குறைந்த வயதிலேயே இடுப்பு மற்றும் மூட்டு வலிகளால் அவதியுறுபவர்களாகவும் நம் பெண்கள் அதிகரித்து வருவது, உணவின் பெருங்குறைபாடு என்று இப்போது ஆங்கில மருத்துவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!”
No comments:
Post a Comment